சிற்பி | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

சிற்பி | தமிழ் ஆசிரியர்கள் | TNPSC Group IV




கோவைமாவட்டம் ஆத்துப் பொள்ளாச்சி என்ற ஊரில் பிறந்தவர் சிற்பி பாலசுப்பிரமணியம். தமிழ் இலக்கியத்தில் முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றவர். பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் கல்லூரியிலும் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
 
அறுபதுகளில் மரபுக்கவிதை படைத்த சிற்பி எழுபதுகளிலிருந்து புதுக்கவிதைகள் படைத்து வருகிறார். நிலவுப்பூஎனும் மரபுக்கவிதைத் தொகுப்பிற்குப் பின்னர் ஒளிப்பறவை’, ‘மௌன மயக்கங்கள்’, ‘சூரியநிழல்போன்ற பல புதுக்கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதைகளைத் தமிழில் பெயர்த்துத் தந்துள்ளார். சிற்பியின் ஒரு கிராமத்து நதிஎனும் கவிதைத் தொகுப்பு 2002 ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமியின் விருது பெற்றது. 
 
http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/images/mat01006gree.gif சிற்பி கவிதையின் இயல்புகள்
 
மரபுக் கவிதைகளை எழுதிய காலத்திலிருந்தே கவிதை உள்ளடக்கத்தில் சமூகப் பார்வையையும் விஞ்ஞான நோக்கையும் அழகியலுடனும் கவித்துவத்துடனும் இணைத்தளித்தவர் சிற்பி. பாரதியும் ஜீவாவும் அவரது முன்னோடிகள். வானம்பாடிகவிதை இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிக் கவிஞரான சிற்பி இடதுசாரிக் கண்ணோட்டமும்,   தமிழுணர்வும்,   அழகியல் தன்மைகளும் கலந்தமைந்த கவிதைகளைப் படைத்தவர். தொன்மங்களை இன்றைய புதிய பார்வையில் இன்றைய சமூக நோக்குடன் கண்டு கவிதை படைத்தவர்.   இவர் கவிதைகளில் தமிழ் மரபும் புதுமையும் இணக்கமாக இணைந்திருப்பதை ஒளிப்பறவை   முன்னுரையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார் . தமிழ்ப் புதுக்கவிதையில் கதைக்கவிதைகள்எனும் வகைமைக்குத் தலையாய எடுத்துக்காட்டு சிற்பியின் மௌன மயக்கங்கள்எனும் தொகுப்பாகும். 
 
பாடப்பகுதிக் கவிதைகள், சிற்பியின் ஒரு கிராமத்து நதிஎன்ற தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப் பெற்றவை. கோவை மாவட்டம் பாலக்காட்டுக் கணவாயின் தெற்குத் தாழ்வரையில் ஆழியாறு என்னும் ஆற்றங்கரையில் அமைந்திருப்பது சிற்பியின் சொந்த ஊரான ஆத்துப் பொள்ளாச்சி. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கிராமத்தில் தாம் பார்த்துப் பழகிய எளிய, அப்பாவி, சராசரிக்கும் கீழான மனிதர்களை இக்கவிதைத் தொகுப்பில் சித்திரித்திருக்கிறார் சிற்பி. அழிந்து வருகிற கிராமத்துப் பண்பாட்டைப் பற்றிய ஏக்கம் நிறைந்த பழம் நினைவுகளால் இக்கவிதைகள் நிரம்பியுள்ளன. சிறுகதைத் தன்மைகொண்ட இந்தக் கவிதைகள் பழமலை என்னும் கவிஞரின் சனங்களின் கதைஎன்னும் கவிதைத் தொகுப்பை நினைவூட்டுபவை. 
 
"அனுபவங்களைக் கவிதைகளாக உணர்கிற நான், ஆள்களையும் கவிதைகளாகவே உணர்கிறேன்" என்றார் பழமலை (சனங்களின் கதை, முன்னுரை, ப. 6). "சராசரி வாழ்வில் தும்பைப்பூ மனிதர்கள்" எனத் தாம் கண்ட மனிதர்களைக் கவிதையாக உணர்கிறார் சிற்பி. 
 
மண்ணும் நதியும் காற்றும், பாசாங்கு ஒளிவு மறைவற்ற மனங்களும், அம்மனிதர்களின் இல்லாமை இயலாமைத் துயரங்களும்,   உணர்ச்சிகளும் சிற்பியின் கைவண்ணத்தால் மனிதநேயக் கவிதையாகியுள்ளன.   கொங்கு நாட்டு மக்களின் பேச்சு வழக்குச் சொற்கள் இக்கவிதைகளில் காட்டப்படும் அடித்தட்டு மக்களுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டுபோய் நிறுத்துகின்றன. அங்கராக்கு (சட்டை), அப்பனூ, மம்மானியா, அடங்கொண்ணியா, ஒணத்தி, வாக்கணங்கெட்ட கழுதை . இப்படிப் பல சொற்கள், தொடர்கள். இனி இத்தொகுப்பிலிருந்து சில கவிதைகளைப் பார்ப்போம்.



ஓடு ஓடு சங்கிலி . . .  
 
அன்பிற்குரியவர்கள் மறைந்துபோன பின்பும் நம் நினைவுகளில் அதிக உயிர்ப்புடன், பட்டுப்போன்ற தூய்மையுடன் அவர்கள் வாழ்ந்து நமது வாழ்வுக்கும் புது மலர்ச்சிகளைத் தருவதுண்டு. இதை எல்லாரும் உணர்ந்திருப்பீர்கள். 
 
அன்பின் வற்றாத ஊற்று எனத் தாயை அன்றி வேறு எந்த உறவையும் தயக்கமில்லாமல் சொல்லிவிட முடியுமா? சிற்பி இந்தக் கவிதையில் தமது தாயை "நேசிப்புக்கு எடுத்த ஜென்மம்" எனக் கசிவாகக் குறிப்பிட்டுத் தம் நினைவில் தாயின் பதிவுகளாக நிலைத்திருப்பவற்றை,   அடங்கிய உணர்ச்சிப் பாங்குடன் விவரிக்கிறார். 
 
அழித்து எழுதமுடியாத
சித்திரம் ஒன்றுண்டு -
அம்மா 
 
எனத் தொடங்குகிறது கவிதை. அதாவது எழுதப்படாமல் தானே அமைந்த ஒரு படிமம் அம்மா. அம்மா எவ்வளவு காலம் வாழ்ந்தாள்? 
 
"காயம்பட்டாக் கூட ரத்தம் வர்ரதில்லே டாக்டர்கிட்டே அவளெக் காட்டுங்கடா" என்று அம்மாவின் உடல்நிலைபற்றி அங்கலாய்ப்பார் அப்பா.   ஆனால் அவர் இறந்த பிறகும் பேரன் திருமணம்,   கொள்ளுப்பேத்தி வரவு ஆகியவற்றையெல்லாம் பிடிவாதமாய்ப் பார்த்துப் போனவள் அம்மா’. 
 
தாயின் தோற்றத்தை, கொங்குநாட்டு விவசாயக்குடிப் பெண்ணின் கச்சிதமான வருணனையைக் கவிதையில் காணலாம். 
 
தாமிர முகம்
கொங்குக் கொண்டை
வெற்றிலைக் கறைபடிந்த
எந்துபல்
சிவப்புமேனி மறைக்கும்
பின் கொசுவக்
கைத்தறிச் சேலையும்
அங்கிங்கெனாதபடி
குத்திவைத்த பச்சையும் 
 
தாயின் சித்திரத்தை மனத்தில் பதிக்கின்றன. 
 
தாயின் அன்பும் பேணுதலும் உயர்திணை.   அஃறிணை பேதம் கூடப் பாராட்டாதவை.   தான் சைவமாக இருந்தாலும் கணவருக்காகக் கை கூசாமல் அசைவம் சமைத்தளிப்பவள்’. 
 
நேசிப்பு. . . நேசிப்பு
புருசனைப் போலவே
பண்ணையத்தையும்
குழந்தைகள் போலவே
எருமைகளையும்!
உறவுகளைப் போலவே
அக்கம் பக்கத்தையும் 
 
அரவணைக்கும் தாயும் ஆதார மண்ணும் வேறுவேறல்ல என்பதை இந்த வரிகளில் உணர்கிறோம் அல்லவா! 
 
ஓலைக் குடிசையில் இருந்த போதும், மாளிகையில் வாழ்ந்த போதும் அம்மாவின் கைப்பக்குவம் கடுகளவும் மாறிவிடவில்லை. கூட்டுச் சாற்றிலும் வெறும் மிளகு ரசத்திலும் அதே சுவை . . . அதே மணம்’. . . 
 
அம்மாவுக்கு அடக்கவும் தெரியும், அடங்கவும் தெரியும். 
 
ஊரையே தூக்கும்
அப்பாவின் கோபத்தை
ஒற்றைப் பார்வையால்
செதுக்கி ஊமையாக்குவாள்
எழுபது வயதிலும்
மூத்தவரைக் கண்டால்
தலைகுனிந்து நிலம்கீறும்
அம்மா ஓர் அதிசயம்
மட்டும் மரியாதையும்
கொட்டிய களஞ்சியம் 
 
குழந்தையாக மாறிக் குழந்தையை வளர்ப்பவள் அம்மா. 
 
ஒற்றையடிப் பாதையில் நடக்க மறுக்கும் குழந்தையை
நடக்க வைக்க
 ஓடு ஓடு சங்கிலி ஓடோடு . . . காலை
மிதிப்பேன் கையைமிதிப்பேன்
 ஓடு ஓடு சங்கிலி ஓடு ஓடு
என்று பாடித் துரத்துவாள்.
 
 
தன்னம்பிக்கையை இப்படி உருவாக்கிக் குழந்தையைப் பெரியவராக்கிய பிறகும் தாய் இல்லாத நிகழ்காலத்தில் கவிஞருக்குச் சோர்வு சூழும்போது அவருக்குள்ளிருக்கும் தாயின் விளையாட்டுக் குரல் ஊக்கமளிக்கிறது, "ஓடு ஓடு சங்கிலி ஓடு ஓடு" எனக் கவிதை இப்படி முடிகிறது. தாயின் சித்திரத்தைக் காட்டும்போது சிற்பியின் மிதமான அளவிலான ஒரு கருத்தோட்டம் தெரிகிறது. வறுமைப்பட்ட குடும்பமாகத் தோன்றவில்லை. ஆயினும் "பட்டுப் புடவையில் அம்மாவைப் பார்த்ததே இல்லை. அப்பா எடுத்துக் கொடுக்க இல்லையோ என்னவோ" என்பதில் தாய்க்கு இல்லாத ஏக்கம் மகனுக்கு இருந்திருப்பது தெரிகிறது. பழமலை தம் சனங்களின் கதையில் காட்டும் தாயை இந்தக் கவிதையுடன் ஒப்பிட்டுப் படித்துப் பாருங்கள். அந்தத் தாய் வறுமைப் பட்டாள்; "அம்மா உன் வறுமை, வாழைப் பழத்தின் தோலும் நாங்கள் எறிந்தால்தான்" என்றும் "காட்டிலும் கிடந்து தான் சீரழிவதை வேம்பிடம் அழுது மூக்கைச் சிந்துவாள்" என்றும் பழமலை தீட்டுவது நொந்தசித்திரம்.


வெள்ளச் சாமியார்
 
கிராமங்களில் சில பொதுக்கதைகள் நிலவுவதுண்டு.   எல்லாரும் எல்லாரையும் நன்றாக அறிந்திருக்கும் வாய்ப்புடையது கிராமம். ஆயினும் ஊர்-பேர் தெரியாத, யாரோடும் தனி உறவில்லாத ஒரு பொது உறவாக, உடைமைகள் உறைவிடம் இல்லாத, அதிகம் பேசாத - ஆனால் அனைவராலும் கவனிக்கப்படுகிற, கிராம நிகழ்வுகளின் பார்வையாளன் அல்லது பார்வையாளியாக இருக்கிற ஒரு மனிதப் பிறவியைக் கிராமங்களில் எதிர் கொள்ள முடியும்.   அவன் /   அவள் ஒரு மனநோயாளி, பிச்சைக்காரன், சாமியார் என ஏதாவது ஒரு வடிவில் இருக்கின்ற பொது மர்மம் எனலாம். சிற்பியின் வெள்ளச் சாமியார்இத்தகைய ஒரு மர்மம். தொடக்கமும் முடிவும் தெரியாத, கிராமத்து நினைவாக மிஞ்சிப்போன ஒரு மனிதன் வெள்ளச் சாமியார். கவிதையின் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்தின் வருணனை. பிற்பகுதியில்தான் வெள்ளச் சாமியார் கதை வருகிறது. 
 
மூன்று நாட்களாக முனகிக் கொண்டிருந்த மழை நின்றுவிட்டது. காலைநேரம். ஆற்றில் பெருவெள்ளம் வருகிறது.   ஊருக்குள் ஆரவாரம் எழுந்தது.   கருந்தண்ணியும் (மலைநீர்) செந்தண்ணியும் (கிளைநதிப் பகுதிகளின் நீர்) கலந்து வருதுடோய் என்ற மகிழ்ச்சிக் குரல்கள் எழுந்தன.   கலங்கல் நீரைத் தெளிவான நீராக மாற்றிக் கொள்ளப் பயன்படும் சேற்றாங் கொட்டையோடு பெண்கள் ஆற்றை நோக்கிப் படையெடுத்தனர்.   இளைஞர்களோ,   வெள்ளம் அடித்துவரும் விறகுகளையும் தடிமரங்களையும் சேகரிக்க முந்தினர்.   ஒரு வெள்ளத்தில் சேகரித்த விறகு ஆறு மாதம் அடுப்பெரிக்க ஆகும் அல்லவா! 
 
வெள்ளம் உயர உயர மேற்குக் கரையில் இருந்த சுண்ணாம்புக் காளவாய்கள் இடிந்து விழுந்தன. வடக்குக் கரைமேட்டில் ஆலமர விழுதேறி அலைகள் விளையாடின’. கிழக்கே காக்காத் தோப்புக்குள் ஆற்றின் ஆர்ப்பாட்டத்தால் தென்னைகள் தள்ளாடின. 
 
வெள்ளத்தில் துள்ளும் கெண்டைகளுக்காக ஈரவேட்டி விரித்தவர்கள் ஒருபக்கம்; கரையேறும் தண்ணீர்ப் பாம்புகள் மேல் கல்லெறிந்த பெண்கள் ஒருபக்கம். குதிக்கட்டுமாஎன்று பாய்ச்சல் காட்டும் இளவட்டங்களுக்குக் கடைக்கண்ணால் மறுதலிக்கும் கொமுரிகள்ஒரு பக்கம் . . . 
 
பாறை உச்சியிலிருந்த பேச்சியம்மாள் கத்தினாள்.   நட்டாத்துத் தண்ணீரில் அடித்துவரப்பட்ட மனிதனைச் சுட்டிக் காட்டினாள். பெண்கள் அய்யோ.. எந்த மகராசனோ.. யார் பெத்த பிள்ளையோ..என்று புலம்பினார்கள். ஒரு கூட்டம் கரையோரமாக ஓடி, வேட்டைக்கார அப்புச்சி கோயிலுக்கு நேராக இருந்த நடுப்பாறையில் ஒதுங்கிய அந்த மனிதனைப் பார்த்தது. மூன்று நாள் கழித்து வெள்ளம் வடிந்த போதுதான் அருகில் சென்று அவனைப் பார்க்க முடிந்தது.   பல்லியின் அடிவயிறு போல வெளுத்து அம்மணமாய் மலங்க மலங்க விழித்தபடி வேற்றுக்கிரகவாசி போல் கிடந்தான் அந்த மனிதன். ஊரே கூடி வைத்தியம் பார்த்தது. வெள்ளத்தில் வந்ததால் வெள்ளச் சாமியார் என்று பெயர் வைத்தது.   அவன் காளி கோயிலை இருப்பிடமாகக் கொண்டான்.   காவடி எடுக்கும் நாட்களில் அவனுக்குச் சோறும் கறியும் குவிந்து போகும்’. 
 
யார்என்று கேட்டால் எவருக்கும் தெரியாது’. 
 
ஆறாண்டுகள் கழித்து அந்த ஆற்றில் மீண்டும் பெருவெள்ளம் வந்தது. 
 
அடங்கொண்ணியா!
மம்மானியாகுப் போகுதுரா
வெள்ளம்
என்று ஆளுக்காள் பேச்சு!
வெள்ளம் வடிந்த மறுநாள்
மாகாளி இருந்தாள்
காவடி இருந்தது
காவிவேட்டியும் துண்டும் இருந்தன
வெள்ளச் சாமியார்
எங்கு தேடியும் தட்டுப்படவே இல்லை. 
 
இவ்வாறு முடிகிறது கதைக் கவிதை. ஒரு மனித வரலாறு முதலும் முடிவும் அறியப்படாத போது அதிலுள்ள ஒரு மர்மம்,   இயல்பாகவே ஒரு கவிதைத் தன்மை கொள்கிறது.   ஒரு வெள்ளமும் மறுவெள்ளமும் தங்களுக்கிடையே ஒரு சாமியாரைப் படைத்துக் காத்து அழித்துப் போய்விட்டன. கவிதையின் விவரணைப் பாங்கு இங்கே குறிப்பிடத்தக்கது.   பாரதி நோட்டமிட்ட குள்ளச்சாமி, ஜெயகாந்தன்,    லா.   ச.   ரா.   போன்றோர் கதைகளில் முன்பின் அற்றுத் திரியும் பரதேசிகள் போன்றோரைப் படித்தவர்கள் வெள்ளச் சாமியாரையும் அவர்களோடு வரிசைப் படுத்திக் கொள்ள முடியும்.

 பாடம் சொன்னவர்கள்  
 
கிராமம் எளிதாய்ப் பழகி எளிதாய்ப் பழையதும் ஆகிவிடும் இயல்புடையது அல்லவா! இளம்பருவத்துத் தோழன்’, ‘மாப்பிள்ளைக் கவுண்டர்’, ‘தெற்குவளவுப் பாட்டையாபோன்ற பல கவிதைகளில் இவ்வாறு பழகி ஒன்றிவரும் கிராமத்து மனிதர்களின் புறத்தோற்றம் . நடவடிக்கைகள், பேச்சுகள்,   நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டு கிராமத்தின் அப்பழுக்கற்ற மனவிரிவைக் காட்டியிருக்கிறார் சிற்பி.   இளம்பிள்ளைகளுக்கு முதன் முதலாகப் பெரியவர்களோடு ஏற்படும் அனுபவங்கள் பிள்ளைகள் மனங்களில் கல் எழுத்துகளாக நின்று விடுபவை.   அத்தகைய அனுபவங்கள் சிலவற்றைப் பாடம் சொன்னவர்கள்கவிதையில் பகிர்ந்து கொள்கிறார் சிற்பி. இதுவும் கதைப்போக்குத்தான். ஆனாலும் இந்த மனிதர்கள் உண்மை மனிதர்களே; ஒருவேளை பெயர்கள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். 
 
அவர்கள் யார் யார்? என்னென்ன பாடம் சொன்னார்கள்? பார்க்கலாம். 
 
1. மலையப்பசாமி  
 
இவன் பீடியைப் பற்றவைத்து உறிஞ்சும் நடவடிக்கையை அணு விவரமாகத் தருகிறார் சிற்பி. உடைக்காத பீடிக்கட்டு;   அதில் கட்டு கிழியாமல் லாகவமாய்ப்  பொத்தலிட்டு,   கட்டு பிரியாமல் நகங்களால் உருவி விரல்களால் நசுக்கித் தேர்ந்தெடுத்த,   பச்சைநூல் சுற்றிய பீடியைப் பல்லியைப் போல் நாசூக்காய்ப் பல்லில் பற்றிக் கொள்வான். பிறகு பற்ற வைப்பான். 
 
யோகியைப் போல்
மூக்கு நுனியில் பார்வை குவித்து
தீக்குச்சியில் கனலும் நெருப்பை
ஒன்றுக்கு மூன்றுதரம் பற்ற வைத்து
பாதாம்கீர் போல் ருசியாய் உறிஞ்சும்
பரம சுகத்தில்
உலகத்தையே அற்பம் என்பது போல் 
 
மலையப்பசாமி ஊதுவான்.   பார்த்துப் பிரமிக்கும் சிறுவனிடம் கண்ணுலே புகை விடுறன் - பாக்கறியா தம்பிஎன்று கேட்பான். ஆசையும் அச்சமுமாய்த் தலையசைத்து, அவன் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்   சிறுவனின்   காலில் சுரீலென்று சூடுவைப்பான். 
 
2. ஒற்றை ஏர் பிடிக்கும் மாறன்  
 
கந்தல் உருமால்,   அதே துணியில் கோவணம் அணிந்த மாறன் பண்ணையில் உழுபவன். பண்ணையார் இல்லாத நேரம். சின்னப் பண்ணையாகிய சிறுவனிடம் கேட்பான், ‘ஏனுங்க சாமி, மேழிப்பால் குடிக்கறீங்களா?’ என்று. விவரம் தெரியாத சிறுவன் ஆவலுடன் தலையசைப்பான். அருகில் அவனை அழைத்துப் பிஞ்சுக் கையை மேழியில் அழுத்தித் தேய்ப்பான் மாறன். பையன் அலறும்போது, 
 
ஏனுங்க சாமி
மேழிப்பால் சூடாப் போச்சுங்களா? 
 
என்று கேலி செய்வான். 
 
3. லாடம் கட்டும் தங்கப்ப ஆசாரி
 
தங்கப்ப ஆசாரி சுடுகாட்டுப் பூவரசு நிழலில் இருப்பான்; கடைக்கண்களில் பீழையும் காதோரம் துண்டுப்பீடியும் அவனது வழக்கமான அடையாளங்கள். லாடம் அடிப்பதற்காக, ஒவ்வொரு காலாகக் கயிறு கட்டி எருதை வீழ்த்தும் கலையே ஓர் அழகு! குளம்புகளுக்கு நடுவே பலகை செருகி, சாக்குப் பையிலிருந்து ஆணிகளையும் லாடத்தையும் வைரக்கல் பரிசோதனைபோல் ஆராய்ந்து ஆராய்ந்து எடுத்து அடிக்கத் தொடங்குவான். ஆணி அடிக்கும் போது மாடு நெளிந்தால், ‘வாக்கணம் கெட்ட கழுதைக்கு ஒணத்தி பாருஎன்று கடிந்து கொண்டே காரியத்தை முடிப்பான். 
 
வேடிக்கை பார்க்கும் சிறுவனிடம் அடியாத மாடு படியாது தம்பிஎன்பான். லாடம் அடிக்காத மாடுஎன்பது பொருள். இதைச் சொல்லிவிட்டுக் காசு குலுங்குவது போல் சிரிப்பான். 
 
4. சப்பைவாய்ப் பழனியப்பன்  
 
இவன் அம்மி ஆட்டுக்கல் கொத்துவதில் தேர்ந்தவன்.   ஓய்ந்த வேளையில் பறவை முட்டை சேகரிப்பான். எந்தக் காட்டில் எந்த மரத்தில் எந்தப் பாறைப் பிளவில் என்ன பறவை முட்டையிடும் என்பது அவனுக்கு அத்துபடி. ஒருநாள் தவிட்டுப் புறா தெரியுமா?’ என்று சிறுவனிடம் கேட்டான். மௌனமாய் உதடு பிதுக்கியபோது தரையில் படுத்தவாக்கில் கொட்டைச் செடிப் புதரில் குறிபார்த்துக் கல்லெறிந்தான். சொல்லி வைத்தாற் போல் இரண்டு தவிட்டுப்புறாக்கள் பறந்தன.  
 
இதனைத் தெரிவிக்கும் சிற்பி எங்கள் ஊரிலும் ஒரு சலீம் அலி (பறவை ஆய்வாளர்) இருந்திருக்கிறார்; ஆனால் யாரும் அறியவில்லை என்கிறார்.   
 
சரி.   இவர்கள் சிறுவன் சிற்பிக்கு என்ன கற்றுத் தந்தார்கள்?   தங்களை உணர்த்தினார்கள்; உலகியல்பை உணர்த்தினார்கள்;   ஏமாந்துவிடக் கூடாது,   கவனமாக இருக்க வேண்டுமெனக் கற்பித்தார்கள்,    அடியாத மாடு படியாது   என்பதைப் போன்ற மரபு மொழிகளின் பொருளைக் கற்பித்தார்கள்.